விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு உயிர்தியாகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராகுல் காந்தி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த பல வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் மத்திய அரசு முன் வைக்கும் சட்ட திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் விவசாய சட்டங்களை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவல நிலையை கண்டு கர்னாலை சேர்ந்த மதகுரு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மோடி அரசின் மிருகத்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. பிடிவாதத்தை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள்” என கூறியுள்ளார்.