சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆற்றல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது என்று கூறிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3 முதலமைச்சர்கள் OBC பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே OBC பிரிவை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்றும் நாட்டில் பழங்குடியினர் பட்டியல் இனத்தவர் எண்ணிக்கை பற்றி யாருக்கும் தெரியவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஏற்கனவே பீகார் மாநிலத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி அதன் அறிக்கையும் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது என்பதும் விரைவில் அது குறித்து அறிக்கை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.