பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டதை தொடர்ந்து ரயில்வே சேவைகள் ரத்து தொடர்வதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடியுள்ளார்.
அதில் பேசிய அவர் நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து ராணுவ ஒழுங்கோடு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக கூறினார். மேலும் முதற்கட்டமாக ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், இரண்டாவது கட்டமாக 19 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு பிறகான ரயில், விமான சேவைகளுக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளும் மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.