ரயில்களில் பான் மசாலா போட்டு எச்சில் துப்புபவர்களால் ரயில்கள் அசுத்தமாவதை தவிர்க்க பை ஒன்றை ரயில்வே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்திய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான ரயில்கள் செயல்பட்டு வரும் நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் எச்சில் துப்பும் செயலால் அசுத்தம், சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. பான் மசாலா, குட்கா போட்டு துப்புவதால் ஏற்படும் கறையை போக்கவே ஆண்டுக்கு ரூ.1200 கோடி ரயில்வே துறைக்கு தேவைபடுவதாக கூறப்படுகிறது.
எச்சில் துப்பாதீர் என்று எச்சரிக்கை பலகைகள் வைத்தாலும் மக்கள் அதன்மீதும் கூட துப்பி விடும் நிலையில் புதிய நடைமுறை ஒன்றை ரயில்வே செயல்படுத்த உள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் எச்சில் துப்பும் பை விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பை ரூ.5 மற்றும் ரூ.10 விலைகளில் கிடைக்கும் என்றும், ஒரு பையில் 20 முறை வரை துப்பிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மறுசுழற்சி பையான இதில் சில விதைகளும் இருக்கும் துப்பிவிட்டு தூக்கியெறிந்ததும் அவை மக்கி விதை முளைக்கும் என கூறப்பட்டுள்ளது.