இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் சட்லஜ் ஆற்றில் விழுந்த சைதை துரைசாமியின் மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதி கவிழ்ந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். அதன்பிறகு, தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதனிடையே, ஆற்றங்கரையோரம் உள்ள பாறையில் மனித மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டது. இது வெற்றி துரைசாமியினுடைது தானா என்பதை கண்டறியும் பொருட்டு, சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. வெற்றி துரைசாமி ஆற்றில் காணாமல் போய் 8 நாட்களுக்கு பிறகு அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.