ஒருவர் கட்டிய புடவையை இன்னொருவர் கட்டுவதில் எந்த கேவலமும் இல்லை என்று கூறிய கேரள மாநில பெண் கலெக்டர் ஒருவர், இன்னொருவர் அணிந்த புடவையை கட்டி வீடியோ ஒன்றையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கலெக்டர் கே.வாசுகி சமீபத்தில் ஷிவகிரி என்றா மலைக் கோயிலிலுக்கு சென்றார். அங்கு சில ஆண்டுகளாக இயங்கி வந்த மறு பயன்பாட்டுக்கான மையத்துக்கு சென்ற அவர் இன்னொரு பெண் பயன்படுத்திய புடவையை வாங்கினார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலெக்டர் வாசுகி மறு பயன்பாட்டுக்கான மையத்தில் வாங்கிய புடவையை அணிந்திருந்தார். சொன்னபடியே அவர் மற்றொருவர் கட்டிய புடவையை அணிந்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், பிறர் உடுத்திய பழைய புடவையை அணிவதில் எனக்கு எந்த கேவலமும் இல்லை. இதன் நோக்கமே சுற்றுச் சூழல் மாசுபாட்டை தவிர்ப்பது. இப்போது நான் அணிந்துள்ள இந்தப் புடவையானது இன்னும் 15 வருடங்கள் தாங்கும். இதனை எப்போதெல்லாம் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அணிவேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை சுமார் ஐந்து லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளதாகவும், சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.