ராஜஸ்தான் மாநிலத்திற்கு கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் சல்மான்கான், அம்மாநிலத்தில் புனிதமாக கருதி வழிபட்டு வரும் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் சல்மானுக்கு 5 வருட சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீர்ப்பு வந்த அன்றே சல்மான்கான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மற்றும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார்
இருப்பினும் இன்று அவர் நீதிமன்றத்திற்கு வந்து சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறை நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறைகள் முடிந்து சற்றுமுன் சல்மான்கான் ஜோத்பூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் கார்மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து மும்பை செல்கிறார். சல்மான்கான் ஜாமீனில் வெளியாகியுள்ளதால் பாலிவுட் திரையுலகம் நிம்மதி அடைந்துள்ளது.