இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரே ஒரு மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுவதை இதற்கு முன்னுதாரணமாக இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் ‘இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைப்பது என்ற முடிவு கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான பெரும்பான்மைவாதம் இலங்கையில் உள்ள தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும். பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.