மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணாப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதனை முன்னர் விசாரித்த கொல்கத்தா காவல் ஆணையருமான ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அழைத்தது. ஆனால் அவர் ஆஜராகததால் சிபிஐ அவரைக் கைது செய்ய மேற்கு வங்கம் வந்தது. ஆனால் சிபிஐ அதிகாரிகளை செயல்பட விடாமல் முற்றுகையிட்டுப் பின் விடுவித்தனர்.
மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட வேண்டுமானால் மாநில அரசின் அனுமதிப் பெற வேண்டும். ஆனால் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே சிபிஐ அத்துமீறல் செய்துவருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மம்தாவின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு அளித்துள்ளனர். அதையடுத்து இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில் ‘மத்திய பாசிச பாஜக அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளை எல்லாம், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமரசத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி அவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ தெரிவித்துள்ளார்.