மணிப்பூரில் நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த 2 ஆயிரம் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் குய்கி - மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஆண்டு மே மாதத்தில் பெரும் கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் பலியான நிலையில், மத்திய, மாநில அரசுகள் ராணுவம், காவல்துறையை கொண்டு கடந்த 16 மாதங்களாக வன்முறையை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
சமீபமாக பரபரப்பு கொஞ்சம் அடங்கியிருந்த சூழலில் வன்முறை கும்பல் ட்ரோன் தாக்குதல், ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணிப்பூரில் ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்த கோரியும், அமைதி நிலையை திரும்ப செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் அமைப்பு, பெண்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த சிஆர்பிஎஃப் கான்வாய் வாகனம் அனுப்பப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்ந்து அந்த வாகனத்தை அடித்து திரும்ப விரட்டியதால் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் மாணவர் போராட்டத்தை கட்டுப்படுத்தவும், ஆயுத குழுக்களின் ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றை கண்காணித்து முறியடிக்கவும் ஜார்கண்டில் இருந்து 2 ஆயிரம் சிஆர்பிஎஃப் வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களுடன் ட்ரோன்களை சுட்டுத்தள்ளும் துப்பாக்கிகள், ஆளில்லா வான்வழி எந்திரங்களை முடக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவையும் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Edit by Prasanth.K