தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் தேசிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தாக்கல் செய்த போது திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் “இந்த சட்ட திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. கல்லூரி மாணவர்களும் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக கல்லூரி மாணவர்களிடமும் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி முன்னும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.