மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தாலும், அதில் உள்ள சில குறிப்பிட்ட விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் முழுமையாகத் தடை விதிக்க முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டது. எனினும், வக்ஃப் வாரியத்தை உருவாக்குவதற்கு ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவரா என்பதை தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நான்கு பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் என அறிவிக்கப்பட்ட ஒரு சொத்து அரசாங்க சொத்தா என்பதை தீர்மானிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனிப்பட்ட உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு வழங்கப்பட முடியாது என்றும், இது அதிகாரத்தை மீறும் செயல் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, அந்தச் சொத்து மூன்றாம் நபருக்கு உரிமை அளிக்கப்பட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.