கொரோனா கட்டுப்பாடுகளின் இரண்டாம் கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் மத்திய அரசு சில சலுகைகளையும் வழங்கி வருகிறது. முதற்கட்ட தளர்வுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்திய தொல்லியல்துறைக்கு உட்பட்ட வரலாற்று சின்னங்களை பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும், முன்னரே இ-பாஸ் பெற்றால் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 71 பகுதிகள் கொரோனா அதிதீவிர பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் பாதுகாப்பு கருதி தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தாஜ்மஹால், பதேர்பூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை ஆகிய வரலாற்று சின்னங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.