இந்திய குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு ஊர்தி இடம் பெறாது என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதி.
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது உருவங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இந்திய குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு ஊர்தி இடம் பெறாது என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பரிசீலனையில் இருந்தது. இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. அணிவகுப்பில் பங்கேற்கும் 12 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை. கடந்த 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இடம் பெற்றுள்ளன.