உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க வேலையின் போது உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு ஆஸ்திரேலிய மனிதர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வந்த சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். கடந்த 18 நாட்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஏராளமானோர் இணைந்து சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் இரவு, பகல் பாராமல் பணியாற்றியதின் விளைவாக தற்போது 41 தொழிலாளர்களும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணியில் மிக முக்கியமான பங்கை வகித்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்கம் தோண்டுதல் நிபுணரான அர்னால்ட் டிக்ஸ். சர்வதேச சுரங்கம் தோண்டுதல் அமைப்பின் தலைவராக உள்ள இவர், உலகில் எந்த பகுதியில் சுரங்க விபத்துக்கள் ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சுரங்கத்திலிருந்து பணியாளர்களை மீட்கும் பணியில் இறங்கிவிடுவாராம்.
கடந்த 18 நாட்களாக உத்தரகாண்டில் இரவு, பகல் பாராது தொடர்ந்து சுரங்கம் தோண்டும் பணியில் பல்வேறு வியூகங்களையும் வகுத்து தொழிலாளர்களை விரைவாக மீட்பதற்கான அனைத்தையும் செய்துள்ளார் அர்னால்ட் டிக்ஸ். அவரது இந்த செயலுக்கு பலரும் நன்றிகளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வரும் நிலையில் அவரது பெயரும் பிரபலம் ஆகியுள்ளது.