சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 190 இடங்களில் இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாகவும் சென்னையில் நடைபெறும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தால் இதனை அடுத்து பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், முன்களப் பணியாளர்களுக்குப் பிறகு 50 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென தெரிவித்துள்ளது.
மேலும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடிப் பேருக்கு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.,