உத்தர பிரதேசத்தில் பக்ரைச மாவட்டத்தில் சிறுவனை கவ்விச் சென்ற ஓநாயை மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசம் மாவட்டத்தின் பக்ரைச் மாவட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக ஓநாய்கள் மனிதர்களை வேட்டையாடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்டு மாதம் முதலாக ஓநாய்கள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில் உத்தர பிரதேச அரசு சில ஓநாய்களை கூண்டு வைத்து பிடித்திருந்தாலும் ஓநாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
பெரும்பாலும் சிறுவர்கள், குழந்தைகளை ஓநாய்கள் குறி வைப்பதால் அப்பகுதி கிராம மக்கள் குழந்தைகளை வெளியே அனுப்பவே பயப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் மகாசி கிராமத்தில் புகுந்த ஓநாய் ஒன்று அங்கிருந்த சிறுவன் ஒருவனை கவ்விக் கொண்டு காட்டுக்குள் ஓடியுள்ளது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, சிறுவனின் தாயும், கிராமத்தினரும் ஓநாயை துரத்தி சென்றுள்ளனர். ஓநாயை மடக்கி பிடித்த அவர்கள் கம்பு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் ஓநாய் உயிரிழந்தது. ஓநாயால் கடிப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Edit by Prasanth.K