திருப்பதியில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஒருநாளில் திரண்ட காணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ள நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.
சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ள நிலையில், தங்கும் விடுதிகளும் முழுவதும் நிரம்பி வழிகின்றது. நேற்று ஒருநாளில் மட்டும் 90,885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 35,707 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் ரூ.4.18 கோடி காணிக்கையாக சேர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால் மக்கள் நிலவரம் அறிந்து வரும்படி தேவஸ்தானம் அறிவுறுத்தியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.