தமிழக பாஜக தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை செளந்திரராஜன் இன்று பதவியேற்கவுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழிசை கவர்னராக பொறுப்பேற்று கொள்கிறார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முன்னதாக சென்னை வந்த தெலங்கானா ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தமிழிசையை சந்தித்து பதவியேற்பு நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினர். இன்று நடைபெறும் கவர்னர் பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.