மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒன்றரை வயது குழந்தை சூரஜ் சாகேத், மோதிய அதிவேக ஸ்கார்பியோ காரின் கூரையில் விழுந்தான். ஆனால், கார் ஓட்டுநர் நிறுத்தாமல் சுமார் 10 கி.மீ. தூரம் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உமேஷ் என்பவர் தனது மைத்துனி முன்னி சாகேத் மற்றும் அவரது கைக்குழந்தை சூரஜ் சாகேத் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. மோதலின் வேகத்தில் உமேஷும் முன்னி சாகேத்தும் சாலையில் கீழே விழுந்தனர். ஆனால், ஒன்றரை வயது குழந்தை சூரஜ் காற்றில் தூக்கி எறியப்பட்டு, எதிரே மோதிய ஸ்கார்பியோ காரின் கூரையில் விழுந்தது.
விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காயமடைந்தவர்களைக் கவனிக்காமல் அல்லது காரின் கூரையில் குழந்தை இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், காரை நிறுத்தாமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார். இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாகத் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் அந்த காரைத் துரத்தி பிடித்தனர்.
தலையிலும் உடலிலும் காயமடைந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது; அவனது தாய், மாமா ஆகியோரின் நிலையும் சீராக உள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.