பெங்களூரு நகரில் கனமழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், வாகனங்களில் சென்றவர்கள் மேம்பாலம் உள்பட பல பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு நடந்து வீடு சென்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு நகரில் சாதாரணமாகவே டிராபிக் பிரச்சனை மிக அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக மேம்பாலத்தில் மூன்று மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் பொறுத்து பார்த்த வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து வீடு சென்றதாக கூறப்படுகிறது.
கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஓடுவதால், போக்குவரத்து சில இடங்களில் தடை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதனால் தான் போக்குவரத்து ஸ்தம்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 30 கிலோமீட்டர் தூரம் இல்லாத அலுவலகத்தை அடைய மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாறியும் டிராபிக் பிரச்சனை மாறவில்லை என்றும், இதற்கு ஆட்சியாளர்கள் உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.