கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அசாம் மாநிலத்தில் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த ரயில் விபத்தில் ரயில் இன்ஜின் மற்றும் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
திரிபுரா மாநிலத்திலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அசாம் அருகே திடீரென தடம் புரண்டது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த விபத்து சம்பவம் நடந்ததாகவும், இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து, தடம் புரண்ட ரயிலை மீட்பு பணிகள் செய்ய, ரயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதாகவும், இதனை அடுத்து லும்டிங் - பதர்பூர் பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அசாம் முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், "அகர்தலா - எல்.சி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலின் எட்டு பெட்டிகள் கவிழ்ந்தது, அடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. உயிரிழப்போ, படுகாயமோ யாருக்கும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பயணிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, 03674 263120, 03674 263126 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.