துருக்கியில் ஒருவரது வயிற்றுக்குள்ளிருந்து 233 பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பொதுவாக காசு, ஊக்கு மேலும் பல சிறிய பொருட்களை குழந்தைகள் விளையாட்டுத்தனமாக விழுங்கி விடும் சம்பவங்கள் அடிக்கடி பல பகுதிகளில் நடக்கின்றன. இதுபோன்ற செயல்களை சில சமயம் பெரியவர்களும் செய்வது உண்டு. முடியை தின்பது, பொருட்களை விழுங்குவது சிலருக்கு ஒரு பழக்கமாக மாறிவிட்டிருக்கக்கூடும்.
துருக்கியில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. துருக்கியை சேர்ந்த 35 வயது நபர் திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டதால் அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது வயிற்றுக்குள் பயன்படுத்திய ஊசி, ஊக்கு, நகம், சில்லரை காசுகள் என பல பொருட்கள் இருந்துள்ளன.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்த பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்தி அந்த நபரை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.