உத்தரபிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான டன்கள் தங்க படிமங்கள் உள்ள பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு நாடும் அதனிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பே 626 டன் மட்டுமே. இந்நிலையில் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
தற்போது உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா பகுதியில் இரண்டு பெரும் தங்க படிமங்கள் கொண்ட பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தி என்ற பகுதியில் 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி பகுதியில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தை விட இது 5 மடங்கு அதிகமாகும்.
இதன்மூலம் உலக நாடுகளில் அதிக அளவு தங்கம் வைத்துள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.