உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் புகார்.
தலைமைக் காவலர் உணவு சரியில்லை என அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.
பல முறை தரமற்ற உணவு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், வெந்ததும் வேகாத சப்பாத்தியும், அதனை தொட்டுக் கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர் போல பருப்பும் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும்.
ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்ட மனோஜ் குமாரை, அங்கிருந்த சக காவலர்கள் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.