உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டி வரும் நிலையில் அவர் அபராதத்தை தவிர்க்கவே இவ்வாறு செய்வதாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் பகதூர் சிங் என்ற வாலிபர் தனது காரில் பயணம் செய்த போது போக்குவரத்துக் காவலர்கள் ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் அபராதம் விதித்ததாகவும் அதற்கு காரணம் கேட்டபோது ஹெல்மெட் அணியவில்லை என கூறியதாகவும் தெரிய வந்தது
காரில் செல்லும் போது எதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசாரிடம் இது குறித்து அவர் விளக்கம் கேட்டபோது எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று போலீசார் அவரிடம் பதில் அளித்ததாக தெரிகிறது
இந்த நிலையில் விரக்தி காரணமாக அவர் மீண்டும் அபராதத்தை தவிர்க்கும் வகையில் காரில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து செல்வதாக தெரிவித்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட செலானில் இருசக்கர வாகனத்தின் படம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வாகனத்தின் தன்மை என்ற கேட்டகிரியில் கார் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
ஆயிரம் ரூபாய் அவர் அபராதம் கட்டியிருப்பதாகவும் மேற்கொண்டு அபராதத்தை தவிர்க்கும் வகையில் தான் காரில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து செல்வதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.