உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலை, ஓடிசா மாநிலம் புரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. முசாஃபர் நகர் மாவட்டதிலிலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் பெட்டிகள் தடம் புரண்டது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் ரயில் பாதை அருகில் உள்ள வீடுகள் மீது மோதின. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 23 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதேபோல், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து தேசிய பேரழிவு மீட்புப் படை வீரர்கள அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிக்குள் சிக்கியிருந்த அனைவரையும் கிரேன் வண்டி மூலம் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், முன்னறிவிப்பின்றி தண்டவாளத்தில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்ததால், அதைக் கண்ட ரயில் ஓட்டுனர் திடீரென பிரேக்குகளை அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.