நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முதன்முறையாக பெண் ஒருவர் தூக்கிலிடப்பட உள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் சொந்த குடும்பத்தினரையே கொன்ற ஷப்னம் என்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பவன்கேதா கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி. இவரது மகள் ஷப்னம் ஆங்கிலத்தில் முதுகலை படித்தவர். இவர் இவரது வீட்டிற்கு எதிரே உள்ள மரம் அறுக்கும் ஆலையில் வேலை பார்த்த சலீம் என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால் இதற்கு அவரது வீட்டார் மறுப்பு தெரிவித்த நிலையில் தனது காதலுடன் இணைந்து ஷப்னம் தனது தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரி மைத்துனர் மற்றும் அவர்களது 10 வயது சிறுவன் உட்பட 7 பேரை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளனர். கடந்த 2008ல் நடந்த இந்த கோர சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஷப்னம் மற்றும் சலீமுக்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது ஷப்னம் 2 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு சிறையில் பிறந்த ஆண் குழந்தை ஷப்னத்தின் நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்ந்து வந்தான். தற்போது 12 வயதாகும் அந்த சிறுவன் தன் தாய்க்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளான். ஆனால் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ஷப்னம் விரைவில் தூக்கிலிடப்பட உள்ளார்.