உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 20 பேர் தப்பியோடிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவதுடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையும் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 37 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அவர்களை சோதனை செய்ய மருத்துவர்கள் சென்றபோது அதில் 20 பேரை காணவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
தப்பியோடிய 20 பேரில் இருவர் தவிர மீத அனைவரும் ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பியோடிய நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.