காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்த முயற்சிக்கு மத்திய அரசும் ஆதரவு கொடுத்து வருவதை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டாவிட்டால் நாங்களே கட்டுவோம் என செய்தியாளர்களிடம் அடாவடியாக வாட்டாள் நாகராஜ் பேசியுள்ளது இரு மாநிலங்களுக்கும் இடையே பதட்டத்தை தூண்டும் வகையில் உள்ளது.
சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வாட்டாள் நாகராஜ் அவ்வப்போது தமிழகத்திற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,' மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 12 ஆம் தேதி, கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் இல்லையேல் தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். வாட்டாள் நாகராஜின் இந்த சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.