மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்தியச் சிறையிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும்,‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பிரஷ்ஷால் பூட்டைத் திறந்து, காவல் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ராம்சங்கர் அவர்களை, சாப்பிடப் பயன்படுத்தும் அலுமினியத் தட்டை வளைத்து கத்திபோல பயன்படுத்தி கொன்று, பின்னர், சிறையில் போர்த்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த போர்வையைக் கயிறுபோல பயன்படுத்தி, சிறைச்சாலையின் சுவர் மீது ஏறி தப்பியுள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட 8 பேரின் குடும்பங்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பர்வேஸ் ஆலம், செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக ‘ஐ.எஸ்.ஓ.’ தரச்சான்றிதழைப் பெற்றுள்ள போபால் சிறையின் பூட்டை பல்தேய்க்கும் பிரஷ்ஷால் திறந்து, கைதிகள் வெளியேறினார்கள்; போர்வைகளைப் பயன்படுத்தி 32 அடி உயரமுள்ள மதில்சுவரை தாண்டிக் குதித்து அவர்கள் தப்பியோடினார்கள் என்று கூறுவதை நம்பும் வகையில் இல்லை.
எனவே, இது ஒரு போலி என்கவுண்ட்டர் என்று கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் கருதுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.