திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ஒட்டி இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமுல் நெய் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற ஸ்டேட் ஆஃப் ஆர்ட் தயாரிப்பு வசதிகளின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். அமுல் நெய் ஆனது உயர் தர பால் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எங்களது பால் பண்ணைக்கு வரும் பால் அனைத்துமே கடுமையான தரக் கட்டுப்பாடு பரிசோதனைகளைக் கடந்தே வருகின்றன. எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாலின் தரம் இருப்பது கலப்படம் ஏதுமின்றி சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
அமுல் நெய் இந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நெய் பிராண்டாக உள்ளது. அதனாலேயே, 50 ஆண்டுகளைக் கடந்தும் இந்திய இல்லங்களில் ஓர் இருங்கிணைந்த பகுதியாக அமுல் தயாரிப்புகள் இருக்கிறது.
இந்த அறிக்கையானது அமுல் நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி பிரச்சாரங்களைத் தடுக்கவே வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக வேறேதேனும் கேள்விகள் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்ணான 1800 258 3333- ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அமுல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.