மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த எம்பிபிஎஸ் மாணவி, மருத்துவமனை வளாகத்திற்கு பின்னால் உள்ள தனியிடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 8:30 மணியளவில், மாணவி தனது ஆண் நண்பருடன் வளாகத்தை விட்டு வெளியே சென்றபோது, வளாகத்தின் வாயில் அருகே இருந்த ஒருவரால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் மாணவியின் செல்போனை பறித்து, அதற்கு 3,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். "என் மகளை மருத்துவராக ஆக்க வேண்டும் என்ற கனவில் இந்த கல்லூரியில் சேர்த்தேன். வளாகத்தில் சரியான பாதுகாப்பு இல்லை," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும், மாணவியுடன் சென்ற நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டக்கல்லூரி மாணவி மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை, RG கார் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் கொலை போன்ற சம்பவங்களால் மம்தா பானர்ஜி அரசு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.