பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் செஃல்பி இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரான கல்லூரி மாணவர் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மலையாள நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபி அபிமன்யூ வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்றார். அபிமன்யூவின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ் கோபி வெளியே வரும்போது அவரை அவருடைய ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் சுரேஷ் கோபி செல்பி எடுத்து கொண்டார்
சாவு வீட்டிற்கு வந்து சிரித்தபடி செல்பி எடுத்ததை பொதுமக்கள் அதிருப்தியுடன் பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்த செய்தியை 'சாவு வீட்டில் அஜித் பட நடிகர் செல்பி எடுத்தார்' என்ற தலைப்பில் ஒரு முன்னணி ஊடகம் வெளியிட்டிருந்தது. 'தீனா' படத்தில் அஜித்தும் சுரேஷ்கோபியும் நடித்திருந்தாலும், சாவு வீட்டில் சுரேஷ் கோபி செல்பி எடுத்ததற்கும் அஜித்துக்கு என்ன சம்பந்தம் என்று கூறி நெட்டிசன்கள் அந்த பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் பெயரை குறிப்பிட்டால்தான் அந்த செய்திக்கு ஒரு பரபரப்பு இருக்கும் என்பதற்காக சம்பந்தமில்லாத செய்தியை வெளியிடுவது ஏன்? என்று அந்த பத்திரிகைக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்