கர்நாடகாவில் அதீத கடன் சுமையால் தீராத மன உளைச்சலுக்கு உள்ளான தொழிலதிபர் ஒருவர் குடும்பத்தினரை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்டாஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஓம் ப்ரகாஷ். இவருக்கு நிகிதா என்னும் மனைவியும், ஆர்ய கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இவர் முன்னர் டேட்டாபேஸ் என்னும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தொழிலை கைவிட்டுள்ளார்.
பிறகு கிரானைட் தொழில் செய்ய ஏற்பாடு செய்தவர், துபாயிலிருக்கும் தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் கடனாக வாங்கியிருக்கிறார். தொழில் தொடங்கிய நாள்தொட்டு லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு தொடர் நஷ்டத்தையும் சந்தித்து வந்துள்ளார் ஓம் பிரகாஷ். அதேசமயம் துபாய் தொழிலதிபர் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் ஓம் பிரகாஷ். ஒரு முடிவெடுத்தவராய் தனது மனைவி, மகனுடன், தனது தாய் தந்தையரையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்லலாம் என்று கிளம்பியிருக்கிறார். மைசூரில் அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். பிறகு தனது நண்பருக்கு போன் செய்து இனி நான் உயிருடன் இருக்க போவதில்லை என தெரிவித்திருக்கிறார். பிறகு தன் மனைவி, மகன், தாய், தந்தை நால்வரையும் சுட்டு கொன்றுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்திருக்கிறார்.
போனில் பேசிய நண்பர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து. போலீஸார் அங்கு செல்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கடன் கொடுத்த துபாய் தொழிலதிபரை தேடி வருகின்றனர்.