முக்கியமாக வெந்தயம் பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. காரணம், அதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.
உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. வெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி. தொடர்ந்து வெந்தயத்தை உணவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும். மூலவியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.
வெந்தயம் சிறந்த உள் மருந்து மட்டுமல்ல சருமத்துக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தர வல்லது. தலைமுடி வேர்களுக்கு பலம் அளிக்கும். சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து அதன்பின் தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கலாம். உடல் சூடு நன்றாக தணிந்து, கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். வெந்தயத்தைப் பொடிசெய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.
வெந்தயத்தை 8 மணிநேரம் ஊறவைத்து, அதைபருத்தி துணியில் மூடிவைத்து பின் மீண்டும் சிலமணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளைகட்டி விடும். முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல்வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.