சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை சிறிதளவு உள்ளன.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்
சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும்.
வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்.