அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே வைத்துக்கொண்டும் டி.வி பார்த்துக்கொண்டும் சாப்பிடகூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.