அருகம்புல்லையும் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும். அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
திடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.