ஒரு மனிதன் முதலில் சிந்திக்கிறான, அதனையே பேசுகிறான, பிறகு செயல்புரிகிறான். இவை எண்ணம், சொல், செயல் எனப்படுகிறது. ஒருவர் தன் மனத்தில் மோசமான எண்ணங்களையே உருவாக்கி பழகி வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அது யாருக்கு தெரியப் போகிறது வெறும் எண்ணம்தானே என்று நினைத்துக்கொள்வார். ஆனால் உண்மை அதுவல்ல.
எந்த ஒரு எண்ணமும் உடலில் ஒருவித அதிர்வலைகளை உண்டாக்கி அதற்குரிய ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. இந்த ரசாயன மாற்றங்கள் உடல் செல்களில் பதிந்து விடுகின்றன. முரணான இந்த எண்ணப் பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் உடல் நோயாகவோ, மன நோயாகவோ வெளிப்படலாம். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும், படித்திருந்தாலும் இயற்கையின் இந்த நியதியை தடுக்க முடியாது.
மேலும் ஒருவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அவர் அறிந்தோ அறியாமலோ - அவரது எண்ணமானது பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்து விடுகிறது. இது தவிர்க்கவே இயலாத மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படிமுறையாகும். எனவே ஒருவரின் சிந்தனையின் தன்மைகேற்ப நன்மையோ, தீமையோ அவரின் சொல் மற்றும் செயலை குறிப்பிட்டு விடுகிறது.