11, 12 ஆம் மாணவர்களுக்கான 4 முக்கிய பாடங்களில் தற்போது 3 முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற வாய்ப்பை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியிருக்கிறது.
11,12 ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் தற்போது தமிழ்/ஆங்கிலம் உட்பட முக்கிய 4 பாடங்களை தேர்வு செய்து படிக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர்கள் அவர்களின் உயர்கல்விக்கு அவசியமில்லாத பாடங்களை விட்டுவிட்டு 3 பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற புதிய நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, அறிவியல் பிரிவில் 3 முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு 4 வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரிவு 1-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களையும், பிரிவு 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம் எனவும், பிரிவு 3-ல் கணிதம், இயற்பியல், கணிணி அறிவியல் ஆகியவற்றையும், பிரிவு 4-ல் வேதியியல், மனையியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கலைப் பிரிவில் 3 முக்கிய பாடங்களை தேர்வு செய்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, பிரிவு 1-ல் வரலாறு, புவியியல், பொருளியல் ஆகியவையும், பிரிவு 2-ல் பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல் ஆகியவையும், பிரிவு 3-ல் வணிகவியல், வணிக கணிதம் & புள்ளியியல், கணக்கு பதிவியல் ஆகியவையும், பிரிவு 4-ல் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல் ஆகியவையும், பிரிவு 5-ல் சிறப்பு தமிழ், வரலாறு, பொருளியல் ஆகியவைகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் என பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 முக்கிய பாடங்களை படிப்பவர்களுக்கு 500 மதிப்பெண் உடைய சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.