142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என்றார்.
திமுகவினருக்கு கோபாலபுரத்தில் உள்ள குடும்பத்தினர் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும் என்றும் அவர் விமர்சித்தார்.
நான்காவது தலைமுறையாக அரசியலில் உள்ள குடும்பத்தினரை அரசியலை விட்டு அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்த அண்ணாமலை, பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என திமுக அரசை கடுமையாக சாடினார்.
ஒரு யோகியாக தமது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி என்றும் 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை பிரதமர் மோடி வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 60 நாட்களுக்கு தவம் போல பாஜகவினர் பணி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.