மத்திய ரயில்வே வாரியம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய அம்ரித் பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் 2 வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் பல வழித்தடங்களில் ஏராளமான ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில்களை அதிகப்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது.
அவ்வாறாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மக்களிடையே சொகுசான பயணங்களுக்கு உகந்ததாக உள்ளது. அதேபோல ஏசி இல்லாத அம்ரித் பாரத் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வடமாநிலங்களில் வரவேற்பை பெற்ற அம்ரித் பாரத் ரயில் தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட மத்திய ரயில்வே வாரியத்தால் திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி - சாலிமர் வரையிலும், சென்னை தாம்பரம் - சந்திரகாச்சி வரையில் இரு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த அம்ரித் பாரத் ரயில்களில் 8 முன்பதிவில்லா பெட்டிகள், 12முன்பதிவு பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இருக்கும். கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயில்கள் மக்கள் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K