கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டில் சிகிச்சை பெரும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக புனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.