நெல்லையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால் அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு(31). இவருக்கும் தக்கலையை சேர்ந்த 16 வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் 16 வயது பெண்ணிற்கு திருமணம் நடைபெறுவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தியதோடு, மணமகன் வினுவை எச்சரித்துவிட்டு சென்றனர்.
இதனால் அவமானமடைந்த வினு, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.