கன்னியாகுமரியில் விஷம் கலந்த உப்புமாவை சாப்பிட்ட பேராசிரியை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சில்வஸ்டர்(29). இவர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பெல்லார்மின்(33). இவரும் ஒரு பேராசிரியர். இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே இவர்களுக்குள் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று திவ்யா கல்லூரிக்கு செல்லும் வழியில் மயக்கம்போட்டு விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திவ்யாவின் வீட்டிலிருந்த நாயும் இறந்துபோனதை அறிந்தனர். திவ்யாவின் தந்தை தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பெல்லார்மின் தான் தன் மகளை விஷம் வைத்து கொன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து போலீஸார் பெல்லார்மிடம் விசாரித்ததில், மனைவிக்கு உப்மாவில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டான். போலீஸார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.