தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேஎஸ் அழகிரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பதவியை இழந்த திருநாவுக்கரசர், மீண்டும் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் தலைமை புதிய பதவியை தற்போது அளித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தேர்தல் வியூகங்களை அமைக்கவும் அனைத்து கட்சிகளும் குழு அமைத்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழு அமைப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தலைவர் பதவியை இழந்ததால் திருநாவுக்கரசர் வேறு கட்சிக்கு சென்றுவிடாமல் இருக்கவே இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.