சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளதோடு, அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அதை காண லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் மயக்கமடைந்து 5 பேர் பலியான நிலையில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த துர் சம்பவம் குறித்து தனது தமிழக வெற்றிக் கழகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K