எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக திமுக அரசியல் ஆலோசகரை நியமித்துள்ள சூழலில் தற்போது அதிமுகவும் புதிய அரசியல் ஆலோசகரை நியமித்துள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் வியூகியான பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளது திமுக. இதற்கு முன்னாள் திமுக அரசியல் ஆலோசகராக செயலாற்றியவர் சுனில். இவரது வியூகங்கள் திமுகவிற்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற காரணமாக இருந்தது.
ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் இவரது வியூகம் திமுக தரப்பிற்கு போதுமான வெற்றியை தரவில்லை. இதனால் சுனிலை அரசியல் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி விட்டு தற்போது பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் கீழ் திமுக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் முன்னாள் ஆலோசகரான சுனிலை தனது அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளது அதிமுக. இதனால் சட்டமன்ற தேர்தல்களுக்கு தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது. முதற்கட்டமாக அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.