கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
தேமுதிக கடந்த வாரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளுடனும் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் பின் செய்தியாளர்களைக் கட்சி அலுவலகத்தில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்த சந்திப்பின் போது திமுகவின் ஸ்டாலின் மற்றும் துரைமுருகனையும் கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல் கூட்டணிக்கு முயற்சி செய்துவரும் அதிமுகவை விமர்சித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 எம்பிக்கள் இருந்தும் ஒரு பயனும் இல்லை எனக் கூறினார். மேலும் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் எதிர்த்து பேசிய ஒரே தலைவர் விஜயகாந்த்தான் எனவும் கூறினார்.
பிரேமலதாவின் இத்தகையப் பேச்சு அதிமுகவில் அவர்களுக்கு எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. பிரேமலதாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஜெயலலிதாவை அரசியல் நாகரீகம் இன்றி விஜயகாந்த் நாக்கை துருத்தியதால்தான் அவரது அரசியல் வீழ்ச்சியை சந்தித்தார்’ எனசூளுர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தொகுதிக்கு 1000 ஓட்டுகள், 500 ஓட்டுகள் வைத்துள்ள கட்சிதான் தேமுதிக. 500 ஓட்டுகளை வைத்திருக்கும் மதிமுகவை திமுக கூட்டணியில் சேர்க்கும்போது, ஆயிரம் ஓட்டுகளை வைத்திருக்கும் தேமுதிகவை, அதிமுக கூட்டணியில் சேர்ப்பதில் தவறில்லை’ எனவும் நக்கலாகப் பேசியுள்ளார்.